இல்லையா? அல்லையா?
அன்பரீர் வணக்கம், தமிழில் ஏராளமான குழப்பங்களுக்கு இடையில், எந்த இடத்தில் "இல்லை" பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் "அல்ல" பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்கும் மிக முக்கியமான குழப்பமாக உள்ளது. நான் அவன் இல்லை. நான் மகான் அல்ல. இது போன்ற படங்களின் பெயர்களும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் பொழுது, நமக்கு மேலும் குழப்பங்கள் வரும். எங்கு "இல்லை" பயன்படுத்த வேண்டும், எங்கு "அல்ல" பயன்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காண்போம். தமிழில் எதிர்மறை இரண்டு வகைப்படும். 1) இல்லையாம் தன்மை 2) அல்லையாம் தன்மை இது அல்லது அது என்று கூறும் பொழுது அது அல்லையாம் தன்மை. -> substitution இது இல்லை என்று வரும் பொழுது இல்லையாம் தன்மை. -> absence இல்லையாம் தன்மைக்குத் திணை, பால், இடம் கிடையாது. அதாவது இருதிணை, ஐம்பால், மூவிடத்துக்கும் பொது. எ.டு: இன்று, இல்லை அல்லையாம் தன்மைக்குத் திணை, பால், இடம் உண்டு. அன்று, அல்ல, அல்லன், அல்லர், அல்லேன், அல்லேம், அல்லை, அல்லீர் என்று திணைக்கு ஏற்றவாறு வரும். அது பசுவா? காளையா? அது பசுவே. காளை அன்று. -> இது அல்லையாம் ...