இல்லையா? அல்லையா?

அன்பரீர் வணக்கம்,

தமிழில் ஏராளமான குழப்பங்களுக்கு இடையில், எந்த இடத்தில் "இல்லை" பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் "அல்ல" பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்கும் மிக முக்கியமான குழப்பமாக உள்ளது.

நான் அவன் இல்லை.

நான் மகான் அல்ல.

இது போன்ற படங்களின் பெயர்களும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் பொழுது, நமக்கு மேலும் குழப்பங்கள் வரும்.

எங்கு "இல்லை" பயன்படுத்த வேண்டும், எங்கு "அல்ல" பயன்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

தமிழில் எதிர்மறை இரண்டு வகைப்படும்.

1) இல்லையாம் தன்மை

2) அல்லையாம் தன்மை

இது அல்லது அது என்று கூறும் பொழுது அது அல்லையாம் தன்மை. -> substitution

இது இல்லை என்று வரும் பொழுது இல்லையாம் தன்மை. -> absence

இல்லையாம் தன்மைக்குத் திணை, பால், இடம் கிடையாது. அதாவது இருதிணை, ஐம்பால், மூவிடத்துக்கும் பொது.

எ.டு: இன்று, இல்லை

அல்லையாம் தன்மைக்குத் திணை, பால், இடம் உண்டு.

அன்று, அல்ல, அல்லன், அல்லர், அல்லேன், அல்லேம், அல்லை, அல்லீர் என்று திணைக்கு ஏற்றவாறு வரும்.

அது பசுவா? காளையா?

அது பசுவே. காளை அன்று. -> இது அல்லையாம் தன்மை.

போட்டி நடக்கும் பொழுது நான் அவ்விடத்தில் இல்லை. -> இது இல்லையாம் தன்மை

அல்லேன் - தன்மை ஒருமை ஆண்பால் பெண்பால் பொது

அல்லேம் - தன்மைப் பன்மை

அல்லை - முன்னிலை ஒருமை உயர்திணை ஆண்பால் பெண்பால் அஃறிணை ஒன்றன்பால் பொது

அல்லீர் - முன்னிலைப் பலர்பால்

அல்லன் - படர்க்கை ஒருமை ஆண்பால்

அல்லள் - படர்க்கை ஒருமை பெண்பால்

அல்லர் - படர்க்கைப் பலர்பால்

அன்று - ஒன்றன் பால்

அல்ல - பலவின் பால்

"அன்" என்ற ஈறு படர்க்கைக்கானது. "ஏன்", "ஏம்" என்ற ஈறு தன்மைக்கானது.

நான் அவன் இல்லை. -> இது தவறு ❌

நான் அவன் அல்லேன். ✅

அவன் நான் இல்லை. -> இது தவறு ❌

அவன் நான் அல்லன்.

நான் மகான் அல்ல. -> இது தவறு ❌

நான் மகான் அல்லேன்.

இச்சொற்றொடர்களே சரி.

இந்த இல்லையாம் தன்மை, அல்லையாம் தன்மைக்கான வேறுபாடு தமிழில் காணாமலே போய்விட்டது. அதைப் பிடித்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமானது.

பழையதைக் காப்போம்..!

புதியதைக் கற்போம்..!

என்றும் அன்புடன்,

கா. ஏ. பாலமுருகன். 

இணைந்திருக்க - Instagram Handle

Comments

Popular posts from this blog

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே

நாவலந்தேயம்

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..!