தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 5

வணக்கம்,

தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 4 என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இக்கட்டுரையில் ஒரு திருக்குறளுக்கு இணையான கருத்தைச் சொல்லும் ஒரு திரைப்படப் பாடலைப் பார்க்கலாம்.

 

1997 ஆம் ஆண்டு இயக்குநர் திரு. வசந்த் அவர்கள் இயக்கத்தில் தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசையமைப்பில் உருவான படம் 'நேருக்கு நேர்'. இது நடிகர் சூர்யாவின் அறிமுகத் திரைப்படம். நடிகர் விஜய், நடிகர் சூர்யா, நடிகை சிம்ரன், நடிகை கெளசல்யா என்று பெரிய நடிகர் பட்டாளமே நடித்த படம். இதில் வரும் பாடல்களுக்காகவே இப்படத்தின் பெயர்  காலங்கடந்து நிற்கும்.

 

தேனிசைத் தென்றல், கவிப்பேரரசு இணையில் அனைத்துப் பாடல்களும் 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தாலும் இன்றும் நம் செவிகளுக்கு இன்ப விருந்தளிக்கும். இப்படத்தில் வரும் 'அவள் வருவாளா' பாடல் அன்றும் சரி, இன்றும் சரி இளைஞர்களிடையில் மிகவும் புகழ்பெற்ற பாடாலாக இருந்து வருகிறது.

 

இப்பொழுது இப்பாடலில் இருந்து சில வரிகளைக் காணலாம்.

 

ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

பெண்ணில் இருக்கு அந்தப் பெண்ணில் இருக்கு

 

தலைவி மீது காதல் கொண்டுள்ள தலைவன், தனது காதலியைப் பார்த்து காணுதல், கேட்டல், உண்ணல், முகர்தல், தொடுதல் என்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் தனது காதலியிடம் இருப்பதாகப் புனைந்துரைக்கிறான்.

 

இப்பொழுது இதற்கு இணையான பொருளைக் கொண்டுள்ள திருக்குறளைப் பார்க்கலாம்.

 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

- திருக்குறள் 1101

 

இக்குறள் மூலம் வள்ளுவர் கூறுவது யாதெனில், "கண்ணால் கண்டும், செவியால் கேட்டும், நாவால் உண்டும், மூக்கால் முகர்ந்தும், மெய்யால் தொட்டும் நுகரப்படும் ஐம்புலனும், ஒளி பொருந்திய வளையல் அணிந்த இந்த மங்கையிடத்தில் உள்ளன"

இக்குறளை நாம் உற்று நோக்கினால், பல காலம் தன் மனைவியிடம் அன்போடு பழகிய ஒருவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும் என்று நாம் ஊகிக்கலாம். தலைவி மீது பேரன்பு கொண்ட தலைவன் அவளைப் பார்த்து, அவள் என் ஐந்து புலன்களுக்கும் விருந்து கொடுக்கக் கூடியவள் என்று புனைந்துரைக்கிறான். அவளைக் கண்டால் இன்பம், அவள் பேசுவதைக் கேட்டால் மகிழ்ச்சி, இதழோடு இதழ் சேர்த்து ஒரு முத்தம் தந்தால் பேரின்பம், அவள் எனதருகில் இருக்கும் பொழுது அவள் விடும் மூச்சுக் காற்று மகிழ்ச்சி, அவளின் கை தொட்டுப் பேசும் பொழுது மேலும் மேலும் மகிழ்ச்சி என்கிறான்.

 

ஒண்தொடி கண் -> இதில் நாம் உற்று நோக்க வேண்டியது யாதெனில், இது அனைத்தும் என் மனைவியிடம் மட்டுமே உள்ளது என்று கூறுகிறான். பிறன் மனை நோக்காப் பேராண்மை கொண்ட ஒரு ஆடவனால் மட்டுமே இப்படி ஒரு கருத்தினைக் கூற முடியும். வள்ளுவர் இதனை மிகவும் அழகாக கூறியிருக்கிறார்.

 

கூடுதல் தகவல்:

நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு என்று ஐம்புலன்களைப் பற்றி பேசப்பட்டுள்ளது.

 

கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி

கண்டவின்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,

ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்,

கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே

- நாலாயிர திவ்ய பிரபந்தம்

(ஒன்பதாம் திருவாய் மொழியின் 3328 பாடல்)

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளிலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருவாய்மொழியிலும், இன்று எழுதப்பட்ட திரைப்படப் பாடலிலும் இந்த ஐம்புலன் என்ற நூல் அறுந்து போகாமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

 

பழையதைக் காப்போம்..!

புதியதைக் கற்போம்..!

 

என்றும் அன்புடன்,

கா. ஏ. பாலமுருகன்.
இணைந்திருக்க - Instagram Handle

Comments

Popular posts from this blog

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே

நாவலந்தேயம்

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..!