தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 3
வணக்கம்,
தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 2 என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இக்கட்டுரையில் ஒரு புறநானுற்றுப் பாடலுக்கு இணையான கருத்தைச் சொல்லும் ஒரு திரைப்படப் பாடலைப் பார்க்கலாம்.
1997 ஆம் ஆண்டு இயக்குநர் திரு. மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவான படம் 'இருவர்'. தமிழக அரசியலில் இரு துருவங்கள் என்று சொல்லக் கூடிய திரு. கருணாநிதி மற்றும் திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கையைத் தழுவி இயக்குநரின் சிறு கற்பனையைத் தூவி மிகவும் துணிச்சலோடு எடுக்கப்பட்ட படமே இருவர்.
திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழும் ஆனந்தனும், எழுத்தாளரும் கவிஞருமான தமிழ்ச்செல்வனும் ஒரு கட்டத்தில் நண்பர்களாகிறார்கள். ஆனந்தனின் நடிப்புக்கு தமிழ்ச்செல்வனின் எழுத்து மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறான். தமிழ்ச்செல்வனின் சொல்வீச்சும், ஆனந்தனின் வாள்வீச்சும் சேரும் பொழுது அவர்கள் இருவரும் இத்திரையில் கோலோச்சி நிற்கலாம் என்று நம்புகின்றனர். (அவ்வாறே நின்றனர்..!)
இப்படிச் சென்று கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாள் ஆனந்தன் வாயிலாக தமிழ்ச்செல்வனுக்கு ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. பாடல் வரும் சூழல் யாதெனில், கடத்திச் செல்லப்பட்ட தன்னாட்டு இளவரசியை மீட்டு வர குதிரை மீது செல்லும் வீரனின் மனதில் ஓடுகின்ற பாடல். அந்த பாடலே, "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு". வைரமுத்து தனது வைர வரிகளால் மிகவும் அருமையாக இப்பாடலை எழுதியிருப்பார். இப்பொழுது அப்பாடலில் இருந்து சில வரிகளைக் காணலாம்.
பிறந்த பிள்ளை நடந்து பழக,
கையில் வேலை கொடுப்போம்..!
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்,
வாளால் கீறி புதைப்போம்..!
இதில் "பிறந்த குழந்தை இறந்து பிறந்தால், வாளால் கீறி புதைப்போம்" என்பதற்கு இணையான கருத்தைப் புறநானூறு பாடல் ஒன்றும் சொல்கிறது. அதை இப்பொழுது பார்க்கலாம்.
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
'ஆஅள் அன்று' என்று வாளில் தப்பார்;
- புறநானூறு (பாடல் - 74)
பாடியவர் : சேரமான் கணைக்கால் இரும்பொறை
திணை : பொதுவியல்
துறை : முதுமொழிக் காஞ்சி
இப்பாடலில் குழவி என்பது குழந்தையைக் குறிக்கும், தடி என்பது தசையைக் குறிக்கும். இப்பாடலில் கணைக்கால் இரும்பொறை கூறுவது யாதெனில், மன்னர் குடியிலே, குழந்தை இறந்து பிறந்தாலும், பிறந்து இறந்தாலும், தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அவற்றை வாளால் வெட்டியே புதைப்பர்.
அக்காலத்தில் தமிழர்கள் மிகவும் வீரத்தோடும், தீரத்தோடும் தமது வாழ்வை வாழ்ந்திருக்கின்றனர் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம். வீழ்ந்தாலும் விழுப்புண் பெற்றோர் தான் வீரர்கள் பட்டியலில் இடம் பெறுவர் என்ற எண்ணம் தமிழர்களின் குருதியில் நீக்கமற நிறைந்திருக்கிறது. தாழ்ந்தாலும் தமிழன் தன்மானம் இழந்து தன் தலையை மட்டும் தாழ்த்த மாட்டான். போரில் அஞ்சி புறமுதுகு காட்டி ஒரு பொழுதும் ஓட மாட்டான்.
பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..!
என்றும் அன்புடன்,
கா. ஏ. பாலமுருகன்.
இணைந்திருக்க - Instagram Handle

Comments
Post a Comment