தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 4
வணக்கம்,
தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 3 என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இக்கட்டுரையில் ஒரு திருக்குறளுக்கு இணையான கருத்தைச் சொல்லும் ஒரு திரைப்படப் பாடலைப் பார்க்கலாம்.
2014 ஆம் ஆண்டு இயக்குநர் திரு. விஜய் அவர்கள் இயக்கத்தில், திரு. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வெளிவந்த படம் 'சைவம்'. கடவுளின் பெயரால் உயிர்களை வதைக்க வேண்டாம் என்ற ஒரு வரியை அடித்தளமாக வைத்து ஒரு அழகிய படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் செல்வி. உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ள பாடல் "அழகே அழகே எதுவும் அழகே". இப்பாடல் திரு. நா. முத்துக்குமாரின் படைப்புக்களில் மற்றும் ஒரு உன்னதமான படைப்பு என்றே கூறலாம். மிகவும் மென்மையான இசையில் அழகிய குரலோடு அமைந்திருக்கும் இப்பாடல், அன்று முதல் இன்று வரை நாம் அனைவரும் கேட்டு மகிழும் பாடலாக இருந்து வருகிறது. மேலும் இப்பாடல் வாயிலாக உத்ரா உன்னிகிருஷ்ணன் விருது(Film Fare) பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது இப்பாடலில் இருந்து சில வரிகளைக் காணலாம்.
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு
வெகு நாட்கள் கழித்துப் பார்க்கும் தோழியிடம், அவளுக்குக் குழந்தை இல்லை என்பதை அறியாமல் உனக்கு எத்தனை குழந்தைகள் என்று ஒருவர் கேட்கும் பொழுது, இக்குழந்தை தனது சிற்றன்னையைப் பார்த்து, "அம்மா..! ஐயா உங்களை அழைக்கிறார்" என்று அழைக்கும் பொழுது இவ்வரிகள் வருகிறது. இதன் மூலம் பாடலாசிரியர், "நன்மை நிகழ்வதற்காக சொல்லும் பொய்களும் மிக அழகானது" என்று கூறுகிறார்.
இப்பொழுது இதற்கு இணையான பொருளைக் கொண்டுள்ள திருக்குறளைப் பார்க்கலாம்.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
- திருக்குறள் 292
இக்குறள் மூலம் வள்ளுவர் கூறுவது யாதெனில், "குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் ஒருவர் சொல்லும் பொய் கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்". ஆதலால் நன்மைக்காகச் சொல்லும் பொய் தவறன்று.
பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..!
என்றும் அன்புடன்,
கா. ஏ. பாலமுருகன்.
Comments
Post a Comment