ஏன் அவ்வாறு விளித்தாய் பாரதி?

எட்டயபுரத்தில் பிறந்து தனது கவிதைகளாலும், பாட்டுக்களாலும், கட்டுரைகளாலும் மக்கள் மனத்தில் விடுதலை உணர்வை விதைத்தவர் பாரதி. "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்" என்று விடுதலை அடைவதற்கு முன்னே உரக்கப் பாடியவர். அன்று முதல் இன்று வரை பாரதியின் படைப்புக்களைப் படித்தால் நமக்குள் எழும் உணர்வு ஒரு தனி சுகம்.

இருந்தும் பலருக்குப் பாரதியின் மேல் சில வருத்தங்கள் உண்டு. ஏன் எனக்கும் சில வருத்தங்கள் இருந்தன. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்", என்று கூறிய பாரதி ஒரு இடத்தில் "ஈனப் பறையர்" என்று குறிப்பிட்டுள்ளார். ஏன் இவ்வாறு எழுதியிருக்கிறார் என்று இவர் மேல் பல விமர்சனங்கள் உள. இப்பொழுது நாம் அதை விளக்கமாகப் பார்ப்போம்.

 

ஈனப் பறையர்களேனும் அவர்

எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோ?

- வந்தே மாதரம்.

 

சாதி மத வேறுபாடு இருக்கக் கூடாது என்று சொன்ன பாரதி ஏன் இங்கு பறையர்களைக் குறிக்கும் பொழுது "ஈனப் பறையர்" எனக் குறிப்பிடுகிறார்? இதே போல் அவருடைய சமூகத்தினரை அவர் "ஈனம்" என்று குறிப்பிடுவாரா? இது தான் இப்பாடலுக்குப் பலர் சொல்லும் விமர்சனம்.

 

இப்பொழுது நாம் "ஈனம்" என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம்.

 

ஈனம் – இழிநிலை, குறைபாடு, கீழ்மை, தாழ்வு.

 

பல்வேறு பொருள் தரக்கூடிய "ஈனம்" என்ற சொல்லை பாரதி எந்தப் பொருளில் பறையர்களுக்குப் பொருத்தினார்? பறையர்களைத் தாழ்வுபடுத்துவதற்காகப் பயன்படுத்தினாரா? இதில் பாரதியின் கருத்து என்ன? இது பற்றி நாம் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

 

அறிவீனம் - அறிவு + ஈனம் - அறிவில் குறைவுபட்ட

பலவீனம் – பலம் + ஈனம் - பலம் குறைந்த

 

அதாவது "ஈனம்" என்ற சொல் "குறைபாடு" என்ற பொருளில் தான் பாரதி சொல்கிறார் என்றே இருக்கட்டும், 'குறைவுபட்ட என்றால்', எதில் 'குறைவுபட்ட பறையர்கள்'? என்ற வினா நம் அனைவரிடத்திலும் எழலாம். அதற்குப் பாரதியே விடையளிக்கிறார்.

  

"தணிந்த வகுப்பினரைக் கைதூக்கிவிடுதல்" என்ற துணைத் தலைப்பில் பாரதி எழுதுகிறார்:

 

"நமக்குள் மற்ற வகுப்பினரைக் காட்டிலும் கல்வி, செல்வம் என்பவற்றில் குறைவுபட்டவராகப் பஞ்சமர் முதலிய சில வகுப்பினர் கொடுந்துயரமடைகிறார்கள்"

 

– இந்தியா 15-5-1909

(இதில் "பஞ்சமர்" என்பது பறையரைக் குறிக்கும்)

 

அதாவது "ஈனப் பறையர்" என்பதில் கல்வி, பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், நாகரீகம் போன்றவற்றில் குறைவுப்பட்ட பறையர்கள் என்றே பாரதி கூறுகிறார்.

 

சரி அது இருக்கட்டும், இதை நான் எப்படி நம்புவது என்று சிலர் கேட்கலாம். பாரதி மற்றொரு இடத்திலும் ஈன என்ற சொல்லை குறைவுபட்ட என்ற பொருளில் கையாண்டிருக்கிறார். அச்சான்றினையும் பார்ப்போம்.

 

"நமக்கு நன்மை வரவேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பின்வருவன : நமது தேசத்தார் இப்போது மிகவும் ஈனமான சரீரநிலை கொண்டிருப்பதை நீக்கும் பொருட்டாக, சரீரப் பயிற்சிக் கூடங்கள் அத்தியாவசியமாக ஏற்படுத்துதல்"

 

– இந்தியா 17-4-1909

 

அதாவது இங்கு உடல்நிலை குறைவுபட்ட (ஈனமான) நிலையில் இருப்பதால் உடற்பயிற்சிக்கூடங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். ஆகவே பாரதி ஈன என்ற சொல்லை குறைவுபட்ட என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறியலாம்.

 

கூடுதல் தகவலாகப் பாரதி தனது சமூகத்தினரையும் விமர்சித்து எழுதியிருக்கிறார். அதில் ஒரு பாடலை இங்கு காணலாம்.

 

பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால்

பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;

யாரானாலும் கொடுமை ... ...

 

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்

பிச்சுப் பணங்கொடு எனத் தின்பான்

கொள்ளைக் கேசென் ... ...

 

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-

சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?... ...

- மறவன் பாட்டு

 

இருந்தாலும் என் மனத்தில் அவ்வப்பொழுது அவர் அச்சொல்லிற்குப் பதில் வேறு சொல்லைப் பயன் படுத்தியிருக்கலாமே என்று தோன்றிக் கொண்டே இருக்கும். நானும் ஒரு சராசரி மனிதன் தானே..! தமிழறிஞரான நீர் இச்சொல்லை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம் அல்லவா? இச்சொல்லிற்கு இணையான வேறு சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாமே? என்று என் மனம் கேட்டுக் கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் நான் பாரதியிடம் கேட்பேன், "ஏன் அவ்வாறு விளித்தாய் பாரதி?"

 

என்றும் அன்புடன்,

கா. ஏ. பாலமுருகன்.

சான்று: http://www.tamilhindu.com/2012/06/bharati-rebuttal6/

Comments

Popular posts from this blog

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே

நாவலந்தேயம்

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..!