முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..!
திரு. மணிரத்தினம் இயக்கி, ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் வரும் 'நல்லை அல்லை' பாடலைக் கேட்ட பொழுது என் மனதில் ஓடிய எண்ணங்களை இங்குப் பதிவிடுகிறேன்.
முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே, முகந்தொட காத்திருந்தேன்..!
மலர் என்ற நிலைவிட்டு பூத்திருந்தாய், மணம் கொள்ள காத்திருந்தேன்..!
மகரந்தம் தேடி நுகரும் முன்னே, வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்..!
முகை - அரும்பு நிலையில் இருந்து வெளியில் வந்து நனைந்து ஈரத்தோடு இருக்கும் நிலை
முகிழ் - முகை வளர்ந்து மணம் வீச தொடங்கும் நிலை
மொட்டு - பூ மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை
மலர் - நன்கு மலர்ந்த பூ, பூவின் உச்ச நிலை
பெரும்பாலும் கவிஞர்கள், பெண் மிகவும் மென்மையானவள் என்பதை குறிப்பிட அவளைப் பூவோடு ஒப்பிடுவர். மேலே உள்ள வரிகள் ஒரு தலைவன் அவனது காதலின் படிமலர்ச்சியைச் சொல்வது போல அமைந்திருக்கிறது. தனது காதலைப் பூவின் பருவங்களோடு ஒப்பிடுகிறான் தலைவன்.
தன் காதலியோடு அறிமுகமான அந்த தொடக்க காலங்களை முகை, முகிழ், மொட்டு என்று ஓவ்வொரு நிலையாகப் புனைந்துரைக்கிறான். அந்தப் பூவின் பருவங்களைப் போல் அவர்களுக்குள் இருக்கும் காதலும் நெருக்கமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நெருக்கமும், காதலும் முழுமை பெற்ற நிலையை மலரோடு ஒப்பிடுகிறான். அந்த மலரின் நறுமணத்தை உணரக் காத்திருக்கிறான். அதாவது அவன் தனது காதலியைத் திருமணம் செய்யக் காத்திருக்கிறான். அவர்களது காதல் எனும் மலரால் அவ்விருவர் மட்டுமின்றி தன் சுற்றத்தாரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திடீரென ஒரு நாள் அந்த மலர் நறுமணம் இழந்து, அவர்களது காதல் திருமணத்தில் முடியாமல் வெயில் காட்டில் காய்ந்து உதிரும் பூ போல, சருகாகி மறைந்தது. உதிர்ந்து சருகானது காதல் மட்டுமல்ல, அவனது மனமும் தான்.
வைரமுத்து, தனது வைர வரிகள் மூலம் பல பாடல்களில் பூவைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆயினும் இவ்வரிகள் என் மனதிற்கு என்றென்றும் நெருக்கமான பாடலாக அமையும்.
என்றும் அன்புடன்,
கா.ஏ. பாலமுருகன்.
இணைந்திருக்க - Instagram Handle
Comments
Post a Comment