தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 2
வணக்கம்,
சென்ற வாரம், தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 1 என்ற தலைப்பில், திருக்குறளில் சொன்ன அதே கருத்தை நமது திரைப்படப் பாடலிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். அதே போல் இந்த வாரமும் ஒரு குறளையும், ஒரு பாடலையும் பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோர், பள்ளிப் பருவத்தில் செய்யுள் பகுதியில் திருக்குறளைப் படித்திருப்போம், சிலர் கடந்திருப்போம். நாம் அந்தக் குறளையெல்லாம் உற்று நோக்கினால், அந்தக் குறள் அனைத்துமே அறத்துப்பால் அல்லது பொருட்பாலில் உள்ள குறளாகவே இருக்கும். அது ஏனோ தெரியவில்லை, காமத்துப்பாலில் இருந்து நாம் சற்று விலகியே இருந்திருக்கிறோம். அந்த 25 அதிகாரத்திலிருந்து நமக்கு ஒன்று அல்லது இரண்டு குறள் தெரிந்தாலே அது பெரும் வியப்புக்குரிய செய்தி தான். இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகும் திரைப்படப் பாடலானது, காமத்துப்பாலில் உள்ள ஒரு குறளில் சொன்ன அதே கருத்தைச் சொல்லியிருக்கிறது.
இப்பொழுது நாம் பாடலுக்கு வருவோம். இயக்குநர் திரு. இராஜேஷ் இயக்கிய "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தை நாம் அனைவரும் ஆர்யா-சந்தானம் நகைச்சுவை இணைக்காகவே பல முறை கண்டு களித்திருப்போம். இசையமைப்பாளர் திரு. யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில் இப்படத்தில் வரும் "யார் இந்தப் பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே" பாடலை நம்மில் பலர் நமது அலைபேசியே வெறுக்கும் அளவிற்கு மீண்டும் மீண்டும் கேட்டு நயந்திருப்போம்.
இப்பாடலைக் கேட்டால் சிலருக்கு கதாநாயகி நயன்தாரா நினைவுக்கு வருவார், சிலருக்கு இதன் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நினைவுக்கு வருவார். இது நயன்தாரா பாடலா இல்லை நா. முத்துக்குமார் பாடலா என்பது ஒரு புறம் இருக்க, இதிலுள்ள சில வரிகளைப் பார்ப்போம்.
நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னைப் பார்ப்பாள்
எனைப் பார்த்து சிரிப்பாள், நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாகப் பொய்யாகத்தான் நடிப்பாள்
கதாநாயகன் தனது காதலியைப் பார்த்து, இப்பாடலைப் பாடும் படி காட்சியமைத்திருப்பார் இயக்குநர். இதில் கதாநாயகியின் நாணத்தையும், கதாநாயகன் மீது அவள் வைத்திருக்கும் காதலையும் மிகவும் அழகாக கூறியிருப்பார் பாடலாசிரியர்.
இப்பொழுது இதற்கு இணையான பொருளைக் கொண்டுள்ள திருக்குறளைப் பார்க்கலாம்.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
- திருக்குறள் 1094
தனது காதலியை அன்போடு பார்க்கும் தலைவன் அவளின் நாணத்தைப் புனைந்துரைத்து, "நான் அவளை நோக்கும்போது தலைகவிழ்ந்து அவள் நிலத்தைப் பார்ப்பாள்; அவளைப் பாராதபோது என்னைப் பார்த்து மகிழ்கிறாள்" என்று கூறி மகிழ்கிறான்.
பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..!
என்றும் அன்புடன்,
கா. ஏ. பாலமுருகன்.
Comments
Post a Comment