தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 1
நாள்தோறும் நமது செவிகளைப் பல பாடல்கள் வருடிச் செல்கின்றன, அதில் சில பாடல்கள் அதன் இசைக்காகவும், வேறு சில பாடல்கள் அதன் வரிகளுக்காகவும், சில பாடல்கள் இரண்டிற்காகவும் நமது மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்கின்றன. பாடல்களைக் கவனிப்பதை வைத்து மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) பெரும்பாலும் இசையைக் கவனிப்பவர்
2) பெரும்பாலும் வரிகளைக் கவனிப்பவர்
3) மகிழ்ச்சியான தருணத்தில் இசையையும், சோகமான தருணத்தில் வரிகளையும் கவனிப்பவர்
இதில் பெரும்பாலானோர் மூன்றாவது வகையைச் சேர்ந்தவராக இருப்பார்கள். நான் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன்.
நாளும் நமது செவிகளைக் கடந்து செல்லும் பல பாடல்கள், நமது இலக்கியங்களில் சொன்ன அதே கருத்தினைப் எதிரொலிக்கின்றன என்று சொன்னால் நமக்குச் சில சமயங்களில் வியப்பாகத் தான் இருக்கும். ஆம், நாமே அறியாமல் அப்பாடல்களை நமது உதடு முணுமுணுத்தது, முணுமுணுக்கிறது, முணுமுணுக்கும் என்பதே உண்மை.
"ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே" என்ற பாடலுக்கு பிரபுதேவா அவர்களுடன் சேர்ந்து நமக்கு ஆட்டமே வரவில்லை என்றாலும் கை கால்களை அசைத்திருப்போம். நமது வாலிபக் கவி தனது வரிகளால் அதகளம் செய்திருப்பார்.
இப்பொழுது இப்பாடலில் இருந்து இரு வரிகளை நாம் பார்க்கலாம்.
யாரையும் தூசி போல
துச்சம் என்று எண்ணாதே
திருகாணி இல்லை என்றால்
இரயிலே இல்லை மறவாதே
நம் சமூகத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு நடனக் கலைஞன், இப்பாடலை ஆடிப் பாடும் படி அமைத்திருப்பார் இயக்குனர். கவிஞர் இதில் என்ன சொல்ல வருகிறார் என்றால், யாரையும் தூசி போல இழிவாக எண்ண வேண்டாம், உருவத்தில் சிறியதாக இருக்கும் திருகாணி(screw) இல்லை என்றால் தொடர்வண்டிப் பெட்டிகளை இணைக்கவே முடியாது. எனவே உருவத்தில் சிறிதாய் இருந்தாலும், வண்டியின் ஓட்டத்திற்கு அது துணையாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
இப்பொழுது இதற்கு இணையான கருத்தைச் சொல்லும், ஒரு திருக்குறளைப் பார்க்கலாம்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
- திருக்குறள் 667
வள்ளுவர் இதில் என்ன கூறுகிறார் என்றால், உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் எள்ளி நகையாடிப் புறந்தள்ளக் கூடாது. உருவத்தில் பெரிதாக இருக்கும் தேர் ஓடுவதற்கு அதன் அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணியே துணை என்று கூறுகிறார்.
இதுபோல, பல திரைப்படப் பாடல்கள் நமது இலக்கியங்கள் சொன்ன கருத்துக்களைக் கூறியிருக்கின்றன. சற்றே அப்பாடல்களை உன்னிப்பாக கவனித்தோமானால், அதனுள்ளே மறைந்திருப்பது நமது இலக்கியங்கள் சொன்ன கருத்துக்களே என்பதை நாம் அறியலாம்.
இலக்கியம் என்பது ஒரு முடிவில்லாப் புதையல் போல, தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும். இலக்கியம் என்பது ஒரு கடல் போல, மேலோட்டமாகப் பார்த்தால், அதன் அழகை இரசிக்கலாம், ஆனால் முத்துக் குளிக்க வேண்டுமெனில், நாம் அதன் ஆழத்திற்குச் சென்றால் மட்டுமே இயலும். இலக்கியக் கடலில் தமிழ் முத்துக்களை எடுக்க அனைவரும் முயல்வோம்.
பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..!
என்றும் அன்புடன்,
கா. ஏ. பாலமுருகன்.
இணைந்திருக்க - Instagram Handle

Comments
Post a Comment