எழுத்துக்களா? எழுத்துகளா?

 

வணக்கம்,

இதற்கு முன் எழுதிய கட்டுரையைச் சரி பார்க்கும் பொழுது எனக்கு ஏற்பட்ட பெரிய ஐயம்,  எழுத்துக்கள் சரியா? இல்லை எழுத்துகள் சரியா? அதைப் பற்றித் தேடலாம் என்று இணையத்தில் சிறிது நேரம் செலவிட்டேன். தெரியாத பல செய்திகளைத் தெரிந்துக் கொண்டேன். அதை உங்களின் பார்வைக்கும் வைக்கலாம் என்ற ஒரு எண்ணத்தில் எழுதியதே இந்தக் கட்டுரை.

 

தமிழில் 'கள்' தவிர வேறு பல விகுதிகள் இருந்தாலும், 'கள்' விகுதி பெரும்பான்மையான இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 'கள்' என்பது பன்மை விகுதியாகும். இவ்விகுதி எவ்வாறு தமிழில் பயன்பாட்டுக்கு வந்தது, பின்பு அதன் வளர்ச்சி எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றி இங்கு காணலாம்.

 

சங்ககாலத்திலிருந்தே 'கள்' என்னும் பன்மை விகுதி புழக்கத்தில் உள்ளது. இதனைத் தொல்காப்பியர் அஃறிணைப் பன்மைக்கு மட்டும் உரியதாகக் குறிப்பிடுகிறார். அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பதற்கு வழங்கும் இயற்பெயர்ச் சொற்களைப் பன்மையாக்குவதற்கு, அச்சொற்களின் பின் 'கள்' என்னும் விகுதி சேர்த்துக் கொள்ளும் இடமும் உண்டு என்கிறார் தொல்காப்பியர். 

 

'கள்ளொடு சிவணும் அவ்இயற் பெயரே

கொள்வழி உடைய பலஅறி சொற்கே'

(தொல்.சொல். 169)

 

எடுத்துக்காட்டு: 

மரம் - மரங்கள்

யானை - யானைகள்

 

இதில் நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், 'கள்' விகுதியோடு வாராத அஃறிணையை, அவை கொண்டு முடியும் வினையை வைத்து ஒருமை, பன்மை தெரியப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்

ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே

(தொல்.சொல். 171)

 

எடுத்துக்காட்டு:

மாடு வந்தது (ஒருமை)

மாடு வந்தன (பன்மை)


பழங்காலத்தில் 'மனிதன்', 'புலவன்' என்ற சொல்லின் பன்மையை குறிப்பதற்கு 'அர்' என்ற விகுதியை பயன்படுத்தினர்.  அதாவது, மனிதன் - மனிதர், புலவன் - புலவர் என்பவையே பன்மை சொல்லாக பயன்பட்டது. பின்னாளில் அர் விகுதி கொண்ட மனிதர், புலவர் போன்ற சொற்கள் மரியாதையைக் குறிக்கும் சொற்களாக மாறிவிட்டது. மனிதர்கள், புலவர்கள் போன்ற சொற்கள் பன்மையை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

 

'கள்' விகுதி பிற சொற்களுடன் சேரும் பொழுது வலி மிகுமா? மிகாதா? என்பதை அறிய சில விதிகள் உண்டு.

 

ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் ‘கள்’ விகுதி வருமாயின் நிச்சயம் வலி மிகும். (ஐகார சொற்கள் இதற்கு விதிவிலக்கு)

 

எடுத்துக்காட்டு:

பூ - பூக்கள் - வலி மிகும்

கை - கைகள் - வலி மிகாது

 

இரண்டெழுத்து சொற்கள் ‘கள்’ விகுதியோடு சேரும் பொழுது அச்சொல்லின் முதலெழுத்தைப் பார்க்க வேண்டும். அவ்வெழுத்து குறிலாக இருந்தால் வலி மிகும், நெடிலாக இருந்தால் வலி மிகாது.

 

எடுத்துக்காட்டு: 

பசு - பசுக்கள் - வலி மிகும்

ஆடு - ஆடுகள் - வலி மிகாது

 

நிறைவாக, மூன்று அல்லது அதற்குமேல் எழுத்துக்கள் இருந்தால், இறுதிக்கு முந்தைய எழுத்தைப் பார்க்க வேண்டும், அது உயிர்மெய்யெழுத்தாக இருந்தால் வலி மிகாது.

 

எடுத்துக்காட்டு: 

சிறகு - சிறகுகள்

கழுகு - கழுகுகள்

 

அதுவே, இறுதிக்கு முந்தைய எழுத்து மெய்யெழுத்தாக இருக்கும் பொழுது வலி மிகலாம், மிகாமலும் போகலாம். -க்கு, -ச்சு, -ண்பு, -ந்து, -ப்பு, -ற்று, -ன்பு, -வு ஆகியவற்றில் முடியும் சொற்களின் பின் ‘கள்’ விகுதி சேரும் பொழுது வலி மிகாது.

 

எடுத்துக்காட்டு: 

அச்சு - அச்சுகள்

பண்பு - பண்புகள்

வாய்ப்பு - வாய்ப்புகள்

ஆய்வு - ஆய்வுகள்

 

இப்பொழுது நாம் நமது தலைப்பிற்கு வருவோம், எழுத்துக்களா? எழுத்துகளா?

 

-ட்டு, -த்து ஆகியவற்றில் முடியும் சொற்களின் பின் ‘கள்’ விகுதி சேரும் பொழுது, பெரும்பாலும் வலி மிகாது, சில இடங்களில் வலி மிகுந்து வருவதால் அதன் பொருள் வேறுபடும்.

 

எடுத்துக்காட்டு:

பாட்டு + கள் = பாட்டுகள் / பாட்டுக்கள்

வாழ்த்து + கள் = வாழ்த்துகள் / வாழ்த்துக்கள்

எழுத்து + கள் = எழுத்துகள் / எழுத்துக்கள்

 

இதனால், நாம் அறிய வேண்டியது யாதெனில், எழுத்துகள், எழுத்துக்கள் இரண்டுமே சரியான சொற்களே.  

 

பொருள்:

எழுத்துகள் - writings

எழுத்துக்கள் - letters

 

இதன் பிறகு, நமது எழுத்துகளில் சரியான எழுத்துக்களை பயன்படுத்துவோம்.

 

பழையதைக் காப்போம்..!

புதியதைக் கற்போம்..!

 

என்றும் அன்புடன்,

கா.ஏ. பாலமுருகன்.


இணைந்திருக்க - Instagram Handle

 

சான்றுகள்:

 

http://www.tamilvu.org/courses/degree/d041/d0412/html/d0412227.htm


http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=84 


https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34423&cat=1360&Print=1 

Comments

Popular posts from this blog

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே

நாவலந்தேயம்

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..!