'ங'கரம் எங்கே?
நமது மொழியில் 247 எழுத்துக்கள் இருந்தாலும், நடைமுறையில் அனைத்து எழுத்துக்களையும் நாம் பயன்படுத்துவதில்லை. சில எழுத்துக்களை நாம் அரிதாகவே பயன்படுத்துகிறோம். சில எழுத்துக்கள் நாம் சிறு வயதில் மொழியைக் கற்கும் பொழுது பார்த்திருப்போம், அதன் பின் அந்த எழுத்துக்கள் நமது கண்ணிற்கு அகப்படாமலே போயிருக்கும். அதுப் போன்ற ஒரு எழுத்து வரிசையைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காணலாம்.
'ங'கரம், உயிர்மெய்யெழுத்துகளில் இரண்டாவது எழுத்து. இவ்வெழுத்தின் மெய்யெழுத்து மூலமான 'ங்', பல இடங்களில் பயன்பட்டிருப்பதை நாம் காணலாம்.
உயிர்மெய் எழுத்துக்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள், உயிர்மெய் வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும். ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு வரிசைகள், சொல்லின் முதலில் வருவதில்லை.
தற்கால தமிழில் 'ங'கரத்தின் பயன்பாடு மிகவும் அரிதாகவே உள்ளது. அ, இ, உ என்ற சுட்டெழுத்துகளுடனும் எ, யா என்ற வினா எழுத்துக்களுடனும் இணைந்து அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் போன்ற சொற்களில் நாம் 'ங'கரத்தை காணலாம்.
உங்ஙனம் என்ற சொல் தற்பொழுது தமிழ் வழக்கில் பெரிதாகக் காணமுடியவில்லை. இன்றும் இலங்கைத் தமிழ் வட்டாரத்தில் உங்கு, உங்ஙனம் போன்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளது என்றுக் கூறப்படுகிறது.
ஒளவையார், "ஙப் போல் வளை" என்று தமது ஆத்திச்சூடியில் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர் இராஜேந்திரக்குமார் தனது நாவல்களில் 'ஙே' வுக்கு உயிர் கொடுக்கும் விதமாக 'ஙே' என்று விழித்தான் என்று சில இடங்களில் பயன்படுத்தினார்.
நாம் அனைவரும் அறிந்தது போல்,
க், ச், ட், த், ப், ற் வல்லினம்
ங், ஞ், ண், ந், ம், ன் மெல்லினம்
இதில் 'க்' என்ற வல்லினத்திற்கு உகந்த மெல்லினம் 'ங்',
'ச்' என்ற வல்லினத்திற்கு உகந்த மெல்லினம் 'ஞ்'.
இவ்வாறிருக்க, 'ச' என்ற வல்லினத்திற்கு உகந்த 'ஞ' என்னும் மெல்லினத்தைச் சரியாக உச்சரிக்காமல், காலப்போக்கில் 'க' என்ற வல்லினத்திற்கு உகந்த 'ங' என்ற மெல்லினத்தை ஒதுக்கிவிட்டு அந்த இடத்தில் 'ஞ' என்னும் மெல்லினத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு 'ங' என்பதை விடுத்து 'ஞ' என்பதை 'க' என்பதற்கு உகந்ததாகக் கொண்டதால், 'ச' என்பதற்கு உகந்த மெல்லினம் கிடைக்காததால் 'ஜ' என்ற எழுத்து தமிழில் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டு: செஞ்சோற்றுக்கடன், விஞ்ஞானம். இந்த இரண்டு சொற்களில் 'ஞ்' என்ற எழுத்தின் உச்சரிப்பு வேறுபடுவதை நாம் காணலாம்.
மேல் குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டில் விஞ்ஞானம் என்பதை 'விங்ஙானம்' என்றே எழுத வேண்டும் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். வேறு சிலர் இவ்வழக்கு தமிழுக்கான பொது வழக்கு இல்லை எனவும், சேர நாட்டின் சில பகுதிகளில் பேசிய வட்டார வழக்கு எனவும், பிற்காலத்தில் இதிலிருந்து மலையாள மொழி உருவாகியிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
கிறுக்கன் என்ற புனைபெயரில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ஒரு பாடலைக் காண்போம்,
‘ஙங்கலந்தன ஙேதிஙேவலல்
ஙங்கலந்தன ஙாஙஙாவரம்
ஙங்கலந்தன ஙஙெள்ஙோரிது
ஙெங்கலந்தன ஙேரிஙத்தலே’
இப்பாடலுக்கு அவர் பதவுரையும் வழங்கியுள்ளார். "ங வரிசையில் பல எழுத்துக்கள் தேவையற்று விடப்பட்டிருப்பதை சரி செய்து அவற்றிற்கும் உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் இன்று கச்சையாய் வரிந்து கொண்டு முதலில் ஒரு பாடல் போட்டேன். இதே முறையைத் தமிழ்ப் பண்டிதர்களும் கைப்பற்றி நடப்பார்களானால், தேவையற்று விடப்பட்டிருக்கும் எழுத்துக்களை அவசியமானவைகளாகச் செய்துவிடலாம்", என்று நகைச்சுவை கலந்த ஒரு கருத்துரையைக் கட்டுரையாக வழங்கியுள்ளார் பாரதிதாசன்.
இதன்பின், நமக்கு கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைத்தால், இறுதியில் இப்படிக்கு என்பதற்கு பதிலாக இங்ஙனம் என்று பயன் படுத்துவோம். இதுபோல, நம்மால் முயன்றவரை தமிழிலுள்ள அனைத்து எழுத்துக்களையும், வழக்கில் இல்லாதச் சொற்களையும் பயன்படுத்த முயற்சிப்போம்.
பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..!
என்றும் அன்புடன்,
கா. ஏ. பாலமுருகன்.
இணைந்திருக்க - Instagram Handle
சான்றுகள்:
https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/9565-2019-08-16-06-22-25
https://ta.quora.com/தமிழில்-ஙா-ஙி-ஙீ-ஙு-ஙூ-ஙெ-ஙே-ஙை/answers/161299810
https://ta.quora.com/தமிழில்-ஙா-ஙி-ஙீ-ஙு-ஙூ-ஙெ-ஙே-ஙை/answers/154849520
Comments
Post a Comment