நான் பார்த்து வியந்த திருக்குறள் உரை

பொய்யா மொழியாம், உலகப் பொதுமறையாம், தெய்வ நூலாம்..!

நம் மறை நூலிற்கோ ஏகப்பட்ட சிறப்புக்கள்..! அச்சிறப்பினையெல்லம் எழுதத் தொடங்கினால் "ஒரு நாள் போதுமா..! அதை நான் எழுத இன்றொரு நாள் போதுமா..!" என்ற வண்ணம் பாடலாகப் பாடலாம்.

 

அதில் ஒரு சிறப்பு யாதெனில் ஏழே சீர்களில் தான் சொல்ல வந்த மொத்தக் கருத்தினையும் மிகவும் அழகாக, படிப்பவர் மனதைக் கவரும் வண்ணம் எடுத்துரைத்த நமது ஐயனின் ஆற்றலைக் கண்டு நெடு நாட்கள் வியந்ததுண்டு..!

 

இது நாள் வரையில் நான் பரிமேலழகர், மு.வ.,  பாவாணர், கலைஞர் போன்ற பல அறிஞர்கள் எழுதிய உரையைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். அண்மையில் நான் ஓர் உரையைப் பார்த்தேன். சட்டென்று பார்க்கும் பொழுது குறளுக்கும் அதன் உரைக்கும் வேறுபாடே தெரியவில்லை.

 

சற்று உற்று நோக்கினால், நமது ஐயன் ஒன்றே முக்கால் அடியில் எப்படிக் குறள் எழுதியிருக்கிறாரோ, அதுபோல உரையும் சரியாக 7 சொற்களில் எழுதியிருக்கிறார் அந்த அறிஞர்.

 

அந்த அறிஞர், மூதறிஞர் வ. சுப. மாணிக்கம் அவர்கள்.

 

வழக்கம் போல், நமது முதல் குறளின் உரையைப் படித்தேன்.

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

 

வ. சுப. மாணிக்கம் உரை:

அகரஒலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்;

ஆதிபகவன் உலகுக்கெல்லாம் முதலானவன்.

 

இக்குறளுக்கு நான் இதற்கு முன் படித்த உரைகளை விட இந்த உரை சற்று தனித்துவமாகத் தெரிந்தது. அது யாதெனில், பொதுவாக மற்ற உரைகளில் அகரம் எழுத்துக்கு முதலாகும் என்றே தொடங்கும். ஆனால் வ. சுப. அவர்களின் உரையில் "அகரஒலி எழுத்துக்கு முதல்" என்று எழுதியிருக்கிறார்.

 

படிக்கப் படிக்க வியப்புக்கு மேல் வியப்பு, மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி..!

 

வ. சுப. மாணிக்கம் அவர்களின் உரையின் இழை

 

படியுங்கள்..! பகிருங்கள்..! மகிழுங்கள்..!

 

என்றும் அன்புடன்,

கா. ஏ. பாலமுருகன்.



Comments

Post a Comment

Popular posts from this blog

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே

நாவலந்தேயம்

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..!