தும்முறது ஒரு குத்தமா?
வணக்கம்,
இணையர்களுக்கிடையில் வரும் ஊடலுக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம். தும்மல் ஒரு காரணாமாக இருக்க முடியுமா? இவ்வினாவைக் கேட்டு நீங்கள் சற்று வியப்படையலாம். காதலிக்கும் ஒரு ஆண்மகனிடம் கேளுங்கள், அவன் கூறுவான் தம்மிடம் ஊடல் கொள்ள வேண்டும் என்று தனது காதலி முடிவு செய்துவிட்டால் தும்மல் என்ன, அவன் விடும் மூச்சுக் காற்றை வைத்துக் கூட ஊடல் கொள்வாள் என்பான்.
இதற்குச் சான்றாக இரு நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
நிகழ்ச்சி 1:
தலைவன் மீது தலைவி ஊடல் கொண்டிருக்கும் ஒரு பொழுது அது. தலைவியை எப்படியாவது சமாதானம் செய்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் தலைவன். அந்த நேரத்தில் அவனுக்குத் தும்மல் வந்துவிடுகிறது. தும்மலின் போது, ஒரு நொடிப் பொழுது நெஞ்சம் நின்று மீண்டும் துடிக்கும் என்பதால் ஒருவர் தும்மினால் 'நூறாண்டு வாழ்க', 'பல்லாண்டு வாழ்க' என்று வாழ்த்துக் கூறும் வழக்கம் உள்ளது.
அவள் வாழ்த்தினாள்..!
பின் அழுதாள்..!
எவள் நினைத்ததால்,
நீர் தும்மினீரென்று.
- தும்மிய பின் தவிக்கும் காளையர் சங்கம்.
நிகழ்ச்சி 2:
இதனைக் கண்ட தலைவி, "ஓ..! தோன்றிய தும்மலை நீர் அடக்க முயல்கிறீரோ, (என்னைத் தவிற) யாரோ உமக்கு வேண்டியவள் உம்மை நினைப்பதை எம்மிடம் மறைக்கிறீரோ" என்று சொல்லி அழுதாள்.
தும்மினாலும் தவறு..
வந்த தும்மலை,
அடக்கினாலும் தவறு..
என் செய்வேன்..!
- தும்மலில் சிக்கித் தவிக்கும் ஆடவர் சங்கம்.
மேற்கூறிய இரண்டும் திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டதே.
நிகழ்ச்சி 1:
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
(அதிகாரம்: புலவி நுணுக்கம், குறள் எண்:1317)
நிகழ்ச்சி 2:
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
(அதிகாரம்: புலவி நுணுக்கம், குறள் எண்:1318)
இவ்விரண்டின் மூலம், "அன்றும் இன்றும் காதலைப் பொருத்த வரை ஆண்களின் நிலை பெரிதாக மாறவில்லை" என்பதை நாம் அறியலாம்.
மேலும் ஊடலைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால், "ஊடல் என்பது உணவில் இருக்கும் உப்புப் போன்றது, குறைந்தால் சுவை குறைந்துவிடும், அதிகமானால் உண்ண முடியாது. அதுபோல, ஊடலும் அளவோடு இருந்தால் வாழ்வு இனிமையானதாக இருக்கும்".
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்
(அதிகாரம்: புலவி, குறள் எண்:1302)
ஊடல் மட்டுமே இருந்தாலும் வாழ்வு அலுத்து விடும். ஊடலே இல்லை என்றாலும் வாழ்வில் நயம் இருக்காது. முன்னோர் சொன்னது போல, "அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு".
பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..!
என்றும் அன்புடன்,
கா. ஏ. பாலமுருகன்.



அருமைடா தம்பி 👌👌👌
ReplyDeleteநன்றி அக்கா..
Delete