நாவலந்தேயம்
இவ்வுலகில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களைக் கொண்ட சில நாடுகளில் நமது நாடும் ஒன்று. இந்தியா, பாரதம், ஹிந்துஸ்தான் போன்று பல பெயர்கள் நமது தாய் நாட்டிற்கு உள்ளது. ஒவ்வொரு பெயர் உருவானதற்கு ஒரு காரணமும் அதன் பின் ஒரு வரலாறும் உண்டு.
விஷ்ணு புராணத்தின்படி, பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் மூதாதையரான பரத மஹாராஜாவின் பெயரைத் தழுவி "பாரதவர்ஷம்", "பாரதம்" என்ற பெயர் வந்தது. இரிக் வேதத்தின் படி "பாரதா" என்றப் பழங்குடியைச் சேர்ந்த "சுதாசா" என்ற மன்னன் "தசராஜ்னா" என்றப் போரில் வெற்றிப் பெற்ற பின் "பாரதம்" என்றப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள செய்திகளை வைத்துப் பார்க்கும் போது, இந்தப் பெயரைப் பெற்றதற்கான கால வரையறை கி.மு. 1 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இந்தியா என்ற சொல், சிந்து சமவெளி நாகரீகத்தை தழுவி வந்தது, அரேபியர்களும் ஈரானியர்களும் "சிந்து" என்கிற சொல்லை "இந்து" என்று உச்சரிப்பார்கள் (இதுவே சிந்து நதியை "Indus" என்று அழைப்பதற்கு காரணமாகவும் இருக்கலாம்). அதுவே மருவி இந்தியா என்றப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது சிந்து நதிக்கு கிழக்கே உள்ள நிலப்பரப்பை இந்தியா என்று சொல்லப்பட்டது. இந்தப் பெயர் வந்ததற்கான கால வரையறை கி.மு 5 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
ஏறத்தாழ 3000 ஆண்டுகளாக பாரதம், இந்தியா என்று அழைக்கபட்டு இருக்கிற நமது நாட்டிற்கு அதற்கு முன் இருந்த பெயர் என்னவாக இருக்கும்? அன்று வாழ்ந்த மக்கள் இந்த நிலப்பரப்பை என்ன என்று குறிப்பிட்டார்கள்?
நாவலந்தேயம்..! இது நம்மில் பலர் கேள்வி படாத நமது இந்திய நிலப்பரப்பின் பழைய பெயர்.
அன்று நமது நிலப்பரப்பு நாவலம், நாவலந்தேயம், நாவலந்தீவு என்று வழங்கப்பட்டது. நாவல் மரங்கள் அதிகமாக காணப்பட்டதால் இதற்கு நாவலந்தேயம் என்றுப் பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.
நாவலந்தேயம் - நாவல் மரங்கள் நிறைந்த இடம்.
மெளரியர்கள் நம் நாட்டை "ஜம்புத்தீவு" என்று அழைத்தனர். "ஜம்பு" என்பது வடமொழியில் "நாவல் பழம்" என்றுப் பொருள். நாவலந்தேயத்திற்கு இணையான வடமொழி சொல் ஜம்புத்தீவு ஆகும்.
சங்க காலத்துப் புலவர்கள் பழங்கால இந்தியாவை நாவலந்தேயம் என்றேக் குறிப்பிடுகிறார்கள்.
கடுவன் இளவெயினனார் எழுதிய பரிபாடலில் நாவலம் என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.
மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்
நாவலம் தண்பொழில் வடபொழில் ஆயிடை
பொருள்:
அவுணர்களைச் சுற்றத்தோடு தன் வேலால் அழித்த நாவலந் தீவு வட பகுதியில்.
பத்துப் பாட்டில் ஒன்றான பெரும்பாண் ஆற்றுப்படையில் தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இவ்வரியினை குறிப்பிடுகிறார்.
நாவலந் தண் பொழில் வீவிண்றி விளங்க (பெரும்பாண் - 465)
பொருள்:
நாவல் மரத்தால் பெயர் பெற்ற குளிர்ந்த நாடு.
மணிமேகலையில் நாவலந்தீவைக் காக்கும் பெண் தெய்வமாக புகார் நகரில் குடிக் கொண்ட சம்பு என்கிற பெண் தெய்வத்தினைப் பற்றி குறிப்புகள் உள்ளது.
இதுப் போன்ற பாடல்களின் மூலம், பழங்கால இந்தியா நாவலந்தேயம் என்றே அறியப்பட்டது என்பதை நாம் அறியலாம்.
பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..!
என்றும் அன்புடன்,
சான்றுகள்:
அருமையான பதிவு பாலமுருகன். உங்கள் மேன்மையான் தமிழ் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
ReplyDelete