தேங்காய் சுடும் விழா
ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக, மாதத்தின் முதல் நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக காவிரி, அமராவதி உள்ளிட்ட பல ஆற்றங்கரையோரங்களில் தேங்காய் சுடும் விழாக் கொண்டாடப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் முக்கியமான மற்றும் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழா இந்த தேங்காய் சுடும் விழா. இவ்விழா சேலம் தவிர கரூர், மேட்டூர், ஈரோடு, நாமக்கல், பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, இராசிபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக புதிதாக இணையேற்ற இணையர்கள் தங்களது வாழ்வில் நல்லெண்ணங்களை விதைத்து சுவையான வாழ்வைத் தொடங்கவும், உழவுத் தொழில் செழிப்பாக அமையவும், செல்வம் பெருகவும், ஆண்டு முழுதும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வேண்டுவதே இவ்விழாவின் மீதுள்ள நம்பிக்கை.
தேங்காயை உரித்துச் சுத்தம் செய்து மஞ்சள் தடவி, அதன் கண்ணில் துளையிட்டு, அதில் உள்ள தேங்காய் நீரை எடுத்ததும், ஊறவைத்த பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பொட்டுக்கடலை, எள், வறுத்த பாசிப்பருப்பு, ஏலக்காய் போன்றவற்றை அரைத்து அதனைத் தேங்காயில் போட்டு அழிஞ்சி மரத்தின் குச்சியால் அந்தத் துளையை அடைத்துவிடுவர். பின் அதைத் தீயில் இட்டு வாட்டி, சுட்டு பின் விநாயகருக்குப் படைத்து அனைவரும் அதைச் சாப்பிட்டு மகிழ்வர்.
இந்த விழாக் கொண்டாடப்படும் காரணம் மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. நன்மைக்கும், தீமைக்கும் இடையே மகாபாரதப் போர், ஆடி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி, பதினெட்டு நாள் நடைப்பெற்று ஆடி 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் நன்மை வெல்ல வேண்டும் என்று ஆடி முதல் நாள் இதுப்போலத் தேங்காய் சுட்டு அவரவர் விருப்பத் தெய்வங்களுக்குப் படையல் இட்டதாகவும் கூறப்படுகிறது.
அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், பொதுவாக ஆடி மாதத்தில் பலருக்கு நோய்த்தொற்று வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், நமது எதிர்ப்புச்சத்தை அதிகரிக்க இதைச் சாப்பிடுவர் என்று கூறப்படுகிறது.
பொதுவாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். மதுரைக்குச் சித்திரைத் திருவிழா போல, சேலம், நாமக்கல் முதலிய மாவட்டங்களில் இந்த தேங்காய் சுடும் விழா மிகப்பெரியளவில் கொண்டாடப்படுகிறது.
பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..!
என்றும் அன்புடன்,
கா.ஏ. பாலமுருகன்.
இணைந்திருக்க - Instagram Handle

அருமையான பகிர்வு
ReplyDeleteநன்றி 🙏🏻
DeleteWonderful.. Recently I got to know about this festival and you have written it so nicely.. exploring this new festivals in different regions is great
ReplyDeleteWonderful.. Recently I got to know about this festival and you have written it so nicely.. exploring this new festivals in different regions is great
ReplyDelete