'நத்' என்னும் ஒரு அசை

ஒரு மொழியை உற்றுக் கவனித்து படிக்கத் தொடங்கும் பொழுது, அதிலிருந்து பல உன்னதமான தகவல்களை நாம் அறிய முடிகிறது. நிலத்தை அகழ்ந்து அதிலிருந்து பழைய வராலாற்றை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். "ஒரு சொல்லை அகழ்ந்து பார்த்தாலே, அந்தச் சொல் நமது பழைய வரலாற்றைச் சொல்லும்" என்று தேவநேயப் பாவாணர் கூறியிருக்கிறார். 

சொல்லை அகழ்ந்தே பழைய வரலாறுகளைச் சொல்லலாம் என்றால், அந்தச் சொற்களை நாம்  அகழ்ந்து ஆய்ந்து அதன் பொருளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சொல்லின் ஒரு அசை ஏதேனும் ஒரு பொருளைத் தந்தால் அது பயன்படுத்தப்படும் மற்ற இடங்களிலும் அதற்கு நெருக்கமான பொருளையேத் தரும். 

'நத்' என்ற ஒரு அசையின் பின்னால் இருக்கும் பொருள் தொடர்பை இங்கு காணலாம்.

'நத்' என்னும் அசையால் உருவான சொற்கள்:

  • நத்தை
  • நத்துதல்
  • நத்தம்

நத்தை - தன் உடல் முழுதும் நீரால் ஆன உயிரினம்.

நத்துதல் - குளிர்வித்தல் (தண்ணீரின் ஒரு தன்மை).

நத்தம் - மழை வந்தால், முதலில் வெள்ளம் பாய்ந்து பரவி மூடுகிற ஒரு இடம். அவ்விடத்தின் சுற்றுப்பகுதிகளோடு ஒப்பிட்டால் இவ்விடம் தாழ்வான பகுதியாக இருக்கும். (நத்தம் என்பது ஒருபொருட்பன்மொழி ஆகும், அதற்கு வேறு சில பொருள்களும் உண்டு)

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது யாதெனில், 'நத்' என்பது ஈரம், வெள்ளம், தண்ணீர் ஆகியவற்றோடு தொடர்புடையச் சொல் தான். 'நத்' என்ற ஒலிக்குப் பின்னால் 'தண்ணீர்' என்ற ஒரு பொருள் மறைந்துள்ளதை நாம் காண முடிகிறது.

நாம் இரண்டு வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்த இரு சொற்களை பார்க்கலாம்.

  • நதி
  • நதம்

நதி:

மேற்குத் திசையில் இருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஆறு. (அனைத்து ஆறுகளையும் நாம் நதி என்றுக் குறிப்பிடுவது சரி ஆகாது, திருத்திக் கொள்வோம்..!) 

நதம்:

கிழக்குத் திசையில் இருந்து மேற்கு நோக்கி ஓடும் ஆறு.

இதனால் நாம் அறிய வேண்டியது யாதெனில், காவேரி போன்று மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் ஆறுகளை நதி என்றுக் குறிப்பிட வேண்டும். கிழக்கிலிருந்து மேற்காக ஓடும் நர்மதா போன்ற ஆறுகளை நதம் என்றுக் குறிப்பிட வேண்டும். (இரண்டையும் தவிர்த்து ஆறு என்று தனித்தமிழில் குறிப்பிடுவது சாலச் சிறந்தது.)

ஆக, ஒரு சொல்லை நாம் ஆராயத் தொடங்கினோமானால், அது நமது மொழியில் நமக்கு தெரியாத பல தகவல்களை நோக்கி பயணிப்பதற்கு ஒரு நுழைவு வாயிலாக அமையும்.  

பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..! 

என்றும் அன்புடன்,
கா. ஏ. பாலமுருகன்.

இணைந்திருக்க - Instagram Handle

ஆதாரங்கள்:

https://www.nakkheeran.in/360-news/illakiyam/whats-meaning-naththi-pizhaikkiraan-soller-uzhavu-9

https://ta.wiktionary.org/wiki/நதி 

https://ta.wiktionary.org/wiki/நதம்

https://www.hotstar.com/in/tv/neeya-naana/s-80/life-of-language-scholars/1100035794 

Comments

Popular posts from this blog

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே

நாவலந்தேயம்

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..!