முளைப்பாரி
வணக்கம், ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஆடித் தள்ளுபடி, ஆடிக் காற்று, மாரியம்மன் கோவில் திருவிழா, உடலைக் குளிர்விக்கும் கம்பங்கூழ், இன்னபிற, இன்னபிற. குறிப்பாக ஊர் திருவிழா, கோவில் திருவிழா என்றாலே தனி மகிழ்ச்சி தான். இக்கட்டுரையில் நாம் காண இருப்பது ஆடித்திருவிழாவில் செய்யக் கூடிய முளைப்பாரி என்ற சடங்கு பற்றியே.
இவ்வுலகில் மனிதனுக்கும் மேலான ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதை மனிதருள் பலர் நம்புகின்றனர். இதனை மனதில் கொண்டு, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கிராம தெய்வங்களுக்குத் திருவிழா நடைபெறும். அதில் ஆடி மாதம் பிறந்துவிட்டால் அம்மனுக்குத் திருவிழாக்கோலம் தான். பெரும்பாலும் அம்மன் கோவில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பதென்பது காலங்காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறை.
முளைப்பாலிகை என்ற சொல்லே நாளடைவில் மருவி முளைப்பாரி என்றானது. முளைப்பாலிகை என்பதற்கு தொண்கூல முளைத்தாழி என்று பொருள் (தொண்கூலம்: நவதானியம் என்ற சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல்). முளைப்பாரியை விதைப் பரிசோதனையின் முன்னோடி என்று சிலர் கூறுவர். உழவர்கள், ஒவ்வொரு ஆண்டும் விளையும் தானியத்தில் ஒரு பங்கை விதையாக எடுத்து தனியே வைத்து பாதுகாப்பார்கள். இவ்வாறு பாதுகாத்த விதைகள் தரமானவையா? விதைப்பதற்கு உகந்த விதையா? என்பதைத் தெரிந்துகொள்வதற்காக முளைப்பாரி தொடங்கியிருக்கலாம் என்று சிலர் கூறுவர்.
முளைப்பாரி சடங்கு பெரும்பாலும் பெண்களால் செய்யப்படும். இது கிராம பெண் தெய்வ வழிபாடலின் ஒரு அங்கம் எனவும் கூறலாம். அம்மன் கோவில் இருக்கும் ஊர்களில், கோவிலுக்கு அருகில் 'முளைப்பிறை' எனப்படும் கீற்றுக்கொட்டகை அமைக்கப்படும். அம்மனுக்குக் காப்புக் கட்டித் திருவிழா தொடங்கும் நாளில் அந்தக் கொட்டகையில் முளைப்பாரி போடுவார்கள்.
"மாரி மகமாயி யம்மா, மனக்குறைய தீர்க்குமம்மா,
இருவெள்ளி வெரதம் சொல்லி, எடுத்து வர்றோம் மொளப்பாரி..!
காத்து மட்டும் வந்து போகும், கட்டப்பொம்மன் கோட்ட போல,
வெய்யில் படா ஓலைபின்னி, வெதச்சு வச்சோம் மொளப்பாரி..!"
ஒரு மண் பானையில் மண் நிரப்பி அதில் தட்டாம் பயறு, பாசிப்பயறு, மொச்சைப் பயறு முதலியனவற்றின் விதைகளை நெருக்கமாகத் தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் ஒன்பது நாட்களுக்கு வைத்துவிடுவார்கள். தினமும் பானையில் இருக்கும் மண்ணிற்கு நீர் ஊற்றி வருவார்கள். தினமும் நீர் தெளிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்தப் பெண் நீராடி, தூய உடை உடுத்திக்கொண்டு இந்தப் பணியைச் செய்துவர வேண்டும்.
முளை வரும் அந்தச் சமயத்தில் பெண்கள் இரவில் கூடி கும்மி கொட்டி அம்மனை வணங்கி முளைப்பாரி நன்கு வளர வேண்டும் என்று வேண்டிப் பாடுவார்கள். இவ்வாறு பராமரிக்கப்படும் பயறுவகை விதைகள் நெருக்கமாக பானையில் முளைத்து, நன்கு வளர்ந்து நிற்கும். இந்த விதைகள் வளர்ந்துள்ளதைப் போல உழவும், தொழிலும், வாழ்வும் செழிக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டுகின்றனர்.
"பாசிப்பயறு போட்ட கையில்,
பவுன் பவுனா நெலைக்குமம்மா..!
தட்டாம்பயறு போட்ட கையில்,
தரணியெல்லாம் கெடைக்குமம்மா..!
மொச்சப்பயறு போட்ட கையில்,
ஒச்சுப்பிணி ஒழியுமம்மா..!
மொளப்பாரி சொமந்த கையில்,
மும்மாரி பொழியுமம்மா..!"
ஒன்பது நாட்கள் வளர்ந்த முளைப்பாரியைப் பெண்கள் சுமந்துகொண்டு, பத்தாம் நாளன்று மேள தாளத்தோடு ஊர்வலமாகச் சென்று, கோவில் திருவிழாவில் குலவையிட்டு, கும்மியடித்து, பாட்டுப்பாடி அம்மனைத் தொழுவார்கள்.
கோணாம கொணங்காம குடவனாத்து தண்ணிவழி,
மொளப்பாரி போகையில் மாரியம்மா நலந்தருவா..!!
கோவில் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக முளைப்பாரியை ஆற்றிலோ, அந்த ஊர் பொதுக் கிணற்றிலோ போட்டு விடுவார்கள். இதற்கான காரணம் யாதெனில், பயிர் வகைகள் ஒரு பருவத்தில் அழிந்து மறுபருவத்தில் துளிர் விடும் என்பதைக் குறிப்பதே. கீழ்வரும் பாடலைப் பாடிக்கொண்டே பெண்கள் முளைப்பாரியை நீர் நிலைகளில் போடுவர்.
”நான் வாடாம வசங்காம வளர்த்தேனம்மா முளைய,
நீ வைகையாத்துத் தண்ணீயிலே போறேயம்மா முளைய..!
நான் சிந்தாம சிதறாம வளர்த்தேனம்மா முளைய,
நீ சிற்றாத்துத் தண்ணீயிலே போறேயம்மா முளைய..!
நான் வாயக்கட்டி வயித்தக்கட்டி வளர்த்தேனம்மா முளைய,
நீ வைகையாத்துத் தண்ணீயிலே போறேயம்மா முளைய..!”
திருமணங்களில்கூட முளைப்பாரி முக்கிய இடம் பிடிக்கும். சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி திருமணத்தில் தானிய முளைப்பாரிகளைப் பெண்கள் கூட்டம் தூக்கி வந்ததை ‘விரித்த பாலிகை முளைக்குட நிரையினர்’ என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இதிலிருந்து பழங்காலத்திலேயே முளைப்பாரி எடுக்கும் சடங்கு நடைமுறையில் இருந்துள்ளது என்பதை நாம் அறியலாம்.
முளைப்பாரி வளர்ப்பது வெறும் சடங்கோ, வழிபாடோ மட்டுமல்ல, அது வீரியமான விதைகளை வேளாண்மைக்குத் தேர்ந்தெடுக்கும் ஒரு உத்தியும்கூட. அடுத்த விளைச்சலுக்கான தரமான விதைகளைத் தங்கள் கிராமங்களுக்குள்ளாகவே தேர்வு செய்ய வசதியாகத் திருவிழா என்ற பெயரில் கொண்டாடிய தொழில்நுட்பம்தான் முளைப்பாரி. இவ்வாறு நம் முன்னோர்களின் ஒவ்வொரு சடங்கிற்குப் பின்னாலும் ஒவ்வொரு காரணம் இருந்திருக்கிறது என்பதை நாம் அறியலாம்.
பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..!
என்றும் அன்புடன்,
கா.ஏ. பாலமுருகன்.
இணைந்திருக்க - Instagram Handle
சான்றுகள்:
https://www.vikatan.com/literature/agriculture/130253-mulaipari-festival
https://www.vikatan.com/spiritual/functions/132485-story-about-mulaipari-festival
http://madanpillaitharmam.blogspot.com/2014/05/blog-post_682.html

Nice one Bala👌
ReplyDeleteநன்றிகள் கிருத்திகா.. 🙏🏻😊
Deleteஅருமை அண்ணா.
ReplyDelete