கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே,
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி, தமிழ்க்குடி!!

இந்த வரிகளை பல தலைவர்கள் மேடையில் கூறும் பொழுது, நாம் அனைவரும் அதை நமது மொழியின் பெருமையை எடுத்துரைக்கிறார்கள் என்று மெய்சிலிர்த்து கைத்தட்டுக்களைத் தந்திருக்கிறோம். பின் சிந்தித்துப் பார்த்தால், கல் தோன்றி மண் தோன்றுவதற்கு முன்பே எப்படித் தமிழ்க்குடி தோன்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு வந்திருக்கலாம். 

நிலம் தோன்றி, மக்கள் தோன்றி, அவர்களின் உணர்வுகளைப் பரிமாறுவதற்கு உருவாக்கப்பட்டதே மொழி. அவ்வாறு இருப்பின் மேற்ச்சொன்ன வரிகள் எதிர்மறையாக இருக்கிறதே? இதைப் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள அந்த முழுப் பாடலையும் அகழ்ந்து, ஆய்ந்து பார்த்து அதிலுள்ள பொருளை நாம் அறியலாம். அதற்கு முன், இவ்விரு வரிகளின் பொருளை ஒரு போன்மி(meme என்பதன் தமிழாக்கம்) வாயிலாகக் காண்போம்.

கல் என்ற சொல்லுக்கு மலை என்ற பொருளும் உண்டு. மண் என்ற சொல்லுக்கு வயல் என்ற பொருளும் உண்டு.

எடுத்துக்காட்டு:

கல்லிடைக்குறிச்சி என்ற ஊர் பெயரில் இருக்கும் கல் மலையையே குறிக்கும்.

கல்லிடைக்குறிச்சி = கல் + இடை + குறிச்சி - மலைகளுக்கு இடையில் மக்கள் வாழும் பகுதி

கல் உயர் தோள், கிள்ளி பரி

'மலை போன்ற உயரமான தோள் உடைய கிள்ளிச் சோழன்' என்று பொருள்.

கல் இயங்கு கருங் குற மங்கையர்

'மலையில் இயங்கும் கருப்பு நிறக் குறத்திப் பெண்கள்' என்று பொருள்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநீழற்
காடும் உடையது அரண். (திருக்குறள் 742)


இப்பொழுது நாம் முழுப் பாடலுக்கு வருவோம்,


“பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!”
- புறப்பொருள் வெண்பாமாலை
கரந்தைப் படலம்.
 

இப்பாடலில் நாம் உற்று நோக்க வேண்டியது யாதெனில், இப்பாடல் கரந்தைப் படலத்தில் இடம்பெற்றுள்ளது.

புறநானுற்றின் படி, வெட்சி வீரர்கள் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை மீட்டுவர செல்லும் வீரர்கள் கரந்தைப் பூவைச் சூடிச் செல்வது மரபு. அதாவது கரந்தை, ஆநிரை மீட்பிற்கு உரிய திணை.

இனி இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போம்.

தோல்வி எனும் பொய் அகன்று, புகழை விளைவிக்கும் செயலை மாந்தன் செய்வதில் என்ன வியப்பு?, நீர் சூழ்ந்திருந்த உலகில், நீர் விலகி, மக்கள் வாழ்வு தொடங்கியது, மலை(குறிஞ்சி நாகரிகம்) தோன்றி, வயல்(மருத நாகரிகம்) தோன்றா காலத்தில், ஆயுதங்களோடு மலைகளில் இருந்த ஆதி குடி என்று பொருள்.

அதாவது, உலகத்தில் நீர் விலகிய பிறகு மக்கள் வாழ்வு துவங்கிற்று, அவ்வாறு மலைகள் தோன்றி, வயல் தோன்றாத காலத்தில், வெட்சி வீரர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்கு ஆயுதங்களோடு வீரத்துடன் தோன்றியிருக்கிறார்கள் நமது ஆதி குடிகள். இதன் மூலம் நமது நாகரிகத்தின் தொன்மையை நாம் அறியலாம்.

இதனால் நாம் அறிய வேண்டியது யாதெனில், ஒரு பாடலில் ஒரு வரியை மட்டும் படித்தோமானால், அதன் முழுப் பொருளையும் நம்மால் அறிய இயலாது. எனவே முழுப் பாடலையும் படிப்போம், மிக முக்கியமாக அப்பாடல் எந்தக் காலத்தில், எந்தச் சூழலில், (இன்னும் ஆழமாகக் கற்போர் எந்தத் திணையில் கூறப்பட்டது, எந்தப் படலத்தில் கூறப்பட்டது) போன்ற செய்திகளை வைத்தே அதன் முழுப் பொருளையும் நம்மால் அறிய இயலும்.

பழையதைக் காப்போம்..!
புதியதைக் கற்போம்..!

என்றும் அன்புடன்,
கா.ஏ. பாலமுருகன். 

இணைந்திருக்க - Instagram Handle

Comments

Post a Comment

Popular posts from this blog

நாவலந்தேயம்

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..!